ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது..



ஏக இறைவனின் திருப்பெயரால்....

وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِّتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ {7}

(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும்,281 சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப்1 பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம்.227 ஒரு கூட்டம் சொர்க்கத்திலும், மற்றொரு கூட்டம் நரகத்திலும் இருக்கும். திருக்குர்ஆன் 42:7.





மக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இப்ராஹீம்(அலை) அவர்கள் தங்களுடைய மனைவி, மகனை விட்டு சிறிது தூரம் சென்றதும் அல்லாஹ்விடம் கேட்ட துஆவை அவர்கள் கேட்ட விதமே வல்ல அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுக்கிறான்

14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில்,33 விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!246

அவர்கள் கேட்ட துஆவில் மனிதர்களின் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கித் திருப்புவாயாக ! என்று கேட்டார்கள்.

மக்கா உதயம் 
மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தில் ஓர் நகரத்தை உருவாக்கவும் இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட துஆவை கேட்டவாறே நிறைவேற்றிக் கொடுக்கும் விதமாகவும் மக்களில் சிலரை அவ்விடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறான் வல்லமை மிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.

அன்னையவர்கள் கட்டிய சிறிய அணைக்கட்டுக்குள் தேங்கிக் கிடந்த தண்ணீருக்கு மேல் பறவைகள் வட்டமிடத் தொடங்குகிறது. அங்கிருந்து சற்று தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஸூர்ஹூம் என்ற வம்சத்தினர் பறவைகள் வட்டமிடுவதை கவனித்து விடுகின்றனர் பாலைவணங்களில் பயணிக்கும் வழிப் போக்கர்கள் ஓரிடத்தில் பறவைகள் வட்டமிடுவதைக் கண்டால் அதன் கீழ் தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதை அறிந்து வைத்திருந்தனர்.

... அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். எனவே, 'பறவை நீர் நிலையின் அருகில் தானே இருக்கும்'' என்று பேசிக் கொண்டார்கள். தங்கள் தூதரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவரின் தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார்கள்... புகாரி.3365.

பயணக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் சிலரை பறவைகள் வட்டமிடும் பகுதியை நோக்கி தண்ணீர் இருக்கிறதா என்பதைப் பார்த்து வர அனுப்புகின்றனர். அங்கே ஓர் நீரூற்றையும் அதனருகில் ஒரு தாய் பச்சிளம் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்தவர்கள் விரைந்து சென்று சம்பவத்தைக் கூறியதும் மீண்டும் அவர்களையே அந்த அன்னை அவர்களிடத்தில் அனுப்பி அங்கே குடியமர்ந்து கொள்ள அனுமதிக் கேட்டு அனுப்புகின்றனர்.

இந்த நீரூற்றில் உரிமை கொண்டாடாத வரை இங்கே குடி அமர்ந்து கொள்வதற்கு தடை இல்லை என்ற நிபந்தனையுடன் அன்னையவர்கள் அவர்களை அனுமதிக்கின்றார்கள்;.


ஜுர்ஹும் குலத்தார் அங்கு வந்து, 'உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?' என்று (ஹாஜராவிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'சரி, (தங்கி வசித்துக் கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத் தண்ணீரில் உங்களுக்கு எந்த பாக்கியதையும் இருக்காது'' என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார். 'சரி (அவ்வாறே ஒப்புக் கொள்கிறோம்)'' என்று கூறினார்கள்புகாரி. 2368.


உள்ளங்களை திருப்பி விட்ட இறைவன்.
அந்தப் பயணக் குழுவினர் நினைத்திருந்தால் இந்த உடன் படிக்கைக்கு சம்மதிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது கிணற்றையும் அபகரித்துக் கொண்டு அன்னை அவர்களையும் அங்கிருந்து விரட்டி இருக்க முடியும். காரணம் அன்றைய வறண்ட பூமியில் பயணிக்கும் வழிப்போக்கர்களுக்கு இது போன்ற ஒரு நீரூற்றைக் காண்பது சொர்க்கததைக் காண்பது போல் இருக்கும்.

மேலும் அன்றைய மக்களிடத்தில் (இஸ்லாம் வருவதற்கு முன்னுள்ள மக்களிடத்தில்) நியாய- அநியாய உணர்வுகளை எதிர் பார்க்க முடியாது. எடுத்ததற்கெல்லாம் வாளையும், ஈட்டியையும் ஏந்தக் கூடியவர்கள்.

தனி ஒரு ஆளாக இருந்து கொண்டு அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு பூமியில் தாமாகத் தோன்றிய நிரூற்றுக்கு உரிமை கொண்டாடுவதா ? என்ற எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில்  ஏற்பட்டிருந்தால் நிலைமையே மோசமாகி இருக்கும்.

ஆனால் அது மாதிரியான தவறான எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்டு விடாமல் அன்னை அவர்களின் உடன்படிக்கைக்கு இணங்கும் விதமாக அவர்களுடைய உள்ளங்களை மாற்றி அமைத்தது இப்ராஹீம் (அலை) அவர்களுடைய துஆ.

... எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக!... 246

அந்த ஸூர்ஹூம் வம்சத்தினர் தான் அன்னை அவர்களிடம் முதலில் வந்து சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அவர்களுடைய உள்ளங்களில் இவர்களின் மீது வல்ல அல்லாஹ்  விருப்பம் கொள்ளச் செய்து விட்டதால் அன்னையவர்களின் உடன்படிக்கைக்கு ஒத்து வருவதுடன் அவர்களுடன் இறுதிவரை இணக்கத்துடன் வாழ்ந்து வந்ததால் அவர்களிலிருந்தே அன்னையவர்கள் தனது மகன் இஸ்மாயில்(அலை) அவர்களுக்கு பெண்ணெடுக்கச் செய்து உள்ளங்கள் மூலம் இணைந்தவர்களை உறவின் மூலமாக இணைத்து வைத்து விடுகிறான் ஏக இறைவன் அல்லாஹ்.

இதன் மூலமாக மக்கா உதயமாகி அது உம்முல் குரா (நாரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது.

இறைவன் அருள் புரிந்தான்
அன்று அன்னை அவர்கள் இதே இடத்தில் தங்களுடைய பச்சிளம் குழந்தை தாகத்தால் அழுது உயிர் பிரியும் நிலையை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது மகனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக மனிதர்களின் உதவியைத் தேடி ஓடி களைத்துப் போனார்கள் அப்பொழுது யார் மூலமாகவும் அன்னை அவர்களுக்கு உதவிக் கிடைக்க வில்லை எந்த மனிதர்களுடைய உதவியும் தேவை இல்லாத அளவுக்கு இறுதியாக அல்லாஹ்வே தனது அருளால் அன்னை அவர்களையும் அவர்களுடைய மகனையும் காப்பாற்றினான்.

...இஸ்மாயீல் அதே நிலையில் தான் (அழுதபடி) இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை... புகாரி.3365

ஆனால் இன்றைய நிலையோ அங்கே ஒரு நீரூற்றைக் கொடுத்து அந்த நீரூற்றுக்கு அன்னை அவர்களை உரிமையாளராக ஆக்கி இதன் மூலம் பலருக்கு உதவும் நிலயை எற்படுத்தினான் இறைவன்.

அதற்கு காரணம் இப்ராஹீம்(அலை) அவர்கள் அன்னை அவர்களை அந்த ஆள் அரவமற்ற இடத்தில் விட்டு பதிலேதும் பேசாமல் திரும்பிய பொழுது எங்களை காக்க எங்கள் இறைவன் போதுமானவன் எனும் உறுதியான இறைநம்பிக்கையை வெளிப்படுத்தி நம்பிய விதம் அங்கேயே தனித்து இருக்க முடிவு செய்ததன் அடிப்படையில் அவர்களுக்கு உதவியும் செய்து  பிறரிடத்தில் அவர்களின் கண்ணியத்தையும் உயரச் செய்தான் கண்ணியம் பொருந்திய கருணையாளன் அல்லாஹ்.

...'இப்ராஹீமே! எங்களை யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்?' என்று பின்னாலிருந்து இப்ராஹீமைக் கூப்பிட்டு கேட்டதற்கு அவர் 'அல்லாஹ்விடம்...' என்றார். 'அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு' என்றார் ஹாஜர்...புகாரி.3365

வல்ல அல்லாஹ்வை உறுதியாக நம்பியோரை அல்லாஹ் கை விட மாட்டான் என்பதற்கு இப்ராஹீம்(அலை) அவர்களுடைய இறைநம்பிக்கையும், அன்னை ஹாஜர் (அலை) அவர்களுடைய  இறைநம்பிக்கையும் சான்றுப் பகர்ந்து நிற்கின்றது.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்